திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி..!
|இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின.
நத்தம்
6-வது டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க சுற்று நெல்லையில் நடந்தது. அடுத்தகட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
இன்று நடைபெற்ற 12-வது ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கவுசிக் காந்தி 19 ரன்களும் நாராயண் ஜெகதீசன் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ராதாகிருஷ்ணன், சசி தேவ் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் பந்துகளை பவுண்டரி சிக்சருக்கு விரட்டினர்.
அதிரடியாக விளையாடிய ராதாகிருஷ்ணன் அரைசதம் அடித்து 49 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சசி தேவ் 35 பந்துகளில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 203 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரூபி திருச்சி வாரியர்ஸ்அணி பேட்டிங் செய்தது.
இந்த நிலையில் திருச்சி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அமித் சாத்விக் மற்றும் சந்தோஷ் சிவ் இருவரும் சிறப்பாக விளையாடி இருவரும் முறையே தலா 33 மற்றும் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய திருச்சி வீரர்கள் அனைவரும் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். நிரஞ்சன் 11 ரன், நிதிஷ் ராஜகோபால் 9 ரன்கள் என விரைவில் விக்கெட்டை இழந்தனர்.
கடைசி நேரத்தில் சற்று அதிரடி காட்டிய ஆதித்ய கணேஷ் 28 ரன்கள் சேர்த்தார். முகமது அத்னன் கான் 10 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஹரிஷ் குமார் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.