சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - கொல்கத்தா ஆட்டம்: டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
|சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 8-ந் தேதி நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 8-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னையில் நடைபெறும் 3-வது லீக் ஆட்டம் இதுவாகும்.
இந்த நிலையில் சென்னை - கொல்கத்தா மோதலுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. PAYTM மற்றும் www.insider.in. ஆகிய இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறலாம் என்றும், ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4 ஆயிரம், ரூ.6 ஆயிரம் ஆகிய விலைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.