< Back
கிரிக்கெட்
4 விக்கெட்டுகள் வீழ்த்தி மொயின் அலி அசத்தல்: முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி..!!
கிரிக்கெட்

4 விக்கெட்டுகள் வீழ்த்தி மொயின் அலி அசத்தல்: முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி..!!

தினத்தந்தி
|
3 April 2023 11:35 PM IST

லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதின.

டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், கான்வேயும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். குறிப்பாக ருதுராஜ் 31 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 57 ரன்கள் குவித்தார். மறுபுறம் கான்வே தனது பங்குக்கு 47 ரன்கள் குவித்தார்.

அடுத்து களமிறங்கிய சிவம் துபே 27 ரன்களும், மொயீன் அலி 19 ரன்களும் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் ராயுடுவின் அதிரடியின் உதவியுடன் சென்னை அணி 200 ரன்களை கடந்தது. ஜடேஜா 3 ரன்னில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து கேப்டன் தோனி மைதானத்திற்குள் நுழைந்ததும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். கடைசி ஓவரை எதிர்கொண்ட அவர், தான் சந்தித்த முதல் 2 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினார். இதனால், ரசிகர்கள் கரகோஷம் விண்ணை பிளந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் அடுத்த பந்தில் கேட்ச்சாகி வெளியேறினார். முடிவில் அம்பதி ராயுடு 27 (14) ரன்களும், சாண்ட்னர் 1 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது.

லக்னோ அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அவேஷ் கான் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் கெய்ல் மேயர்ஸ் ஆகியோர் களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடியை தொடங்கிய இந்த ஜோடி அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தினர்.

இந்த ஜோடியில் தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்ல் மேயர்ஸ் 21 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 53 (22) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால் சென்னை அணி ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். அவரைத்தொடர்ந்து கே.எல். ராகுலும் 20 (18) ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குர்ணால் பாண்ட்யா 9 ரன்னும், மார்க் ஸ்டோய்னிஸ் 21 ரன்களும் எடுத்து வெளியேறினர். மறுமுனையில் அதிரயாக ரன்கள் சேர்த்துக்கொண்டிருந்த நிகோலஸ் பூரன் 32 (18) ரன்களில் கேட்ச் ஆனார். கடைசி ஒவரில் பதோனி 23 (18) ரன்களில் ஆட்டமிழந்தார்.

முடிவில் கிருஷ்ணப்பா கவுதம் 17 (11) ரன்களும், வுட் 10 (3) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி 4 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளும், மிட்செல் சாண்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் லக்னோ அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லீக் சுற்றின் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

மேலும் செய்திகள்