< Back
கிரிக்கெட்
சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல்: சேப்பாக்கத்தில் நடக்கிறது
கிரிக்கெட்

சென்னை-லக்னோ அணிகள் இன்று மோதல்: சேப்பாக்கத்தில் நடக்கிறது

தினத்தந்தி
|
3 April 2023 5:48 AM IST

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-லக்னோ மோதும் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கிறது.

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறும் 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்சும் மோதுகின்றன.

டோனி தலைமையிலான சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதில் சென்னை நிர்ணயித்த 179 ரன் இலக்கை குஜராத் 4 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்தது. சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் (92 ரன்), மொயீன் அலி (23 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. பந்து வீச்சில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹேங்கர்கேகர் 3 விக்கெட் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார்.

இன்றைய ஆட்டம் உள்ளூரில் நடைபெற இருப்பது சிறப்பம்சமாகும். ஏனெனில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் விளையாட இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரமும், மெதுவான தன்மை கொண்ட ஆடுகளமும் சென்னை வீரர்களுக்கு நிச்சயம் உத்வேகம் அளிக்கும் என்று நம்பலாம். சேப்பாக்கம் மைதானம் சென்னை சூப்பர் கிங்சின் கோட்டையாகும். இங்கு 56 ஆட்டங்களில் ஆடி 40-ல் வெற்றிகளை குவித்துள்ள சென்னை அணி இந்த சீசனில் இங்கிருந்து வெற்றிக்கணக்கை தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

லக்னோ எப்படி?

லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ அணி தனது தொடக்க ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்தில் டெல்லியை பந்தாடியது. புயல்வேகத்தில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் 14 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார். இதே நம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்தையும் எதிர்கொள்ள காத்திருக்கிறார்கள். இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு சந்தித்த ஆட்டத்தில் லக்னோ வெற்றி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், ராஜ்வர்தன் ஹேங்கர்கேகர்.

லக்னோ: லோகேஷ் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, குருணல் பாண்ட்யா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி அல்லது கிருஷ்ணப்பா கவுதம், அவேஷ்கான், ரவி பிஷ்னோய், ஜெய்தேவ் உனட்கட், மார்க்வுட்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

ஐ.பி.எல். ரசிகர்களுக்கு மெட்ரோ ரெயிலில் இலவச பயணம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. சேப்பாக்கத்தில் நடக்கும் ஐ.பி.எல். போட்டியை பார்க்க வருகை தரும் ரசிகர்கள் இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணிக்க வழிவகை செய்யும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கும், சென்னை சூப்பர் கிங்சுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்துக்கான டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் டிக்கெட்டில் உள்ள கியூ ஆர் பார்கோடுகளை மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஸ்கேன் செய்து இலவசமாக பயணிக்கலாம். இரவு நேர போட்டி நடக்கும் நாட்களில் மட்டும் மெட்ரோ ரெயில் சேவை 1½ மணி நேரம் நீட்டிக்கப்படும்.

அத்துடன் அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு சிரமமின்றி செல்ல பேருந்து சேவையும் அளிக்கப்படுகிறது. மேலும் வடபழனி, சென்டிரல், திருமங்கலம், விம்கோ நகர், நந்தனம் ஆகிய 5 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பெரிய திரைகளில் ஐ.பி.எல். போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்