< Back
கிரிக்கெட்
நாட்டிலேயே சென்னை ரசிகர்கள்தான் அதிக ஆதரவு கொடுக்கக் கூடியவர்கள் - டிராவிட் நெகிழ்ச்சி

image courtesy: AFP

கிரிக்கெட்

நாட்டிலேயே சென்னை ரசிகர்கள்தான் அதிக ஆதரவு கொடுக்கக் கூடியவர்கள் - டிராவிட் நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
6 Aug 2024 9:09 AM IST

டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பு விருந்தினராக ராகுல் டிராவிட் கலந்துகொண்டார்.

சென்னை,

8-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் ஷாருக்கன் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய கோவை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்களை சேர்த்தது. இந்த இலக்கை திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் எட்டி அசத்தியது.

இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டி.என்.பி.எ.ல் நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று சென்னைக்கு வந்த டிராவிட் இறுதிப்போட்டியை கண்டு களித்து கோப்பையை வழங்கி வாழ்த்தினார்.

அப்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உங்களுடைய மறக்க முடியாத நினைவுகளை பற்றி கூறுமாறு கேட்கப்பட்டது. அதற்கு தம்முடைய இளம் வயதில் சென்னையில் தான் டிவிஷன் லீக் போட்டிகளில் விளையாடி வளர்ந்ததாக டிராவிட் கூறினார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10,000-வது ரன்னை சென்னை மண்ணில்தான் அடித்ததாக ராகுல் டிராவிட் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-"இங்கே எனக்கு சில சிறந்த நினைவுகள் இருக்கிறது. உண்மையில் இங்கேதான் என்னுடைய வளரும் இளம் வயதில் லீக் போட்டிகளில் விளையாடினேன். அப்போது சேப்பாக்கம் மைதானம் வித்தியாசமாக இருந்தது. அனைத்தும் கான்கிரீட் ஸ்டாண்ட்களாக இருந்தன. ஆனால் தற்போது அது மாறியுள்ளதை பார்ப்பது அழகாக இருக்கிறது. இங்கே லீக் கிரிக்கெட்டை விளையாடியது சிறப்பாக இருந்தது.

அதேபோல சர்வதேச கிரிக்கெட்டிலும் இங்கே சென்னை ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடியது சிறப்பானதாக இருந்தது. ஏனெனில் நம் நாட்டிலேயே சென்னை ரசிகர்கள்தான் அதிக ஆதரவை கொடுக்க கூடியவர்கள். அவர்கள் கிரிக்கெட்டை விரும்பக் கூடியவர்கள். எனவே சேப்பாக்கத்தில் நான் விருப்பத்துடன் விளையாடினேன். என்னுடைய 10,000 ரன்களை இந்த மைதானத்தில் தான் அடித்தேன். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக இங்கே மறக்க முடியாத டெஸ்ட் வெற்றிகளை பெற்றோம். அது மிகவும் ஸ்பெஷலான தருணம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்