ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்பு...!!
|ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லாகூர்,
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இப்போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி நேற்று (வியாழன் கிழமை) நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
மூன்றாவது போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறும். தற்போது முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்திற்கு தள்ளப்படும். இந்த வருடம் இதுவரை 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள பாகிஸ்தான் அணி அதில் 7-ல் வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி மூன்றாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.