சாம்பியன்ஸ் டிராபி; இந்தியா வரவில்லையெனில் கிரிக்கெட் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை - பாக். வீரர்
|ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
கராச்சி,
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று முடிவில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ளன. இந்த தொடரை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் அல்லது இலங்கையில் போட்டிகளை நடத்துமாறு ஐ.சி.சி-யிடம் பி.சி.சி.ஐ வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ஐ.சி.சி இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட மறுத்தால் அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு தொடரை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம் என பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
கடந்த வருடம் நாங்கள் இந்தியாவுக்கு சென்று விளையாடியதைப் போல அவர்கள் தற்போது பாகிஸ்தானுக்கு வர வேண்டும். விளையாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று பலரும் எண்ணற்ற முறை சொல்லி விட்டனர். அதே போல இந்திய வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட விரும்புவதை அவர்களுடைய பேட்டிகளில் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்கள் சொந்தக் கொள்கைகளை வைத்துள்ளனர். எனவே அவர்களது வாரியம் இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மறுபுறம் எங்கள் கிரிக்கெட் வாரியத் தலைவர் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் தான் நடக்கும் என்று ஏற்கனவே தெளிவாக கூறியுள்ளார். எனவே இந்தியா வரவில்லை என்றால் நாங்கள் அவர்கள் இல்லாமல் விளையாடுவோம். இந்தத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற வேண்டும். ஒருவேளை இந்தியா வரவில்லையெனில் கிரிக்கெட் முடிந்து விட்டது என்று அர்த்தமில்லை. இந்தியாவை தாண்டி இங்கே பல அணிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.