சாய் கிஷோரின் சுழல் ஜாலத்தால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி: 'பிளே-ஆப்' சுற்றுக்கும் தகுதி
|திருப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் சாய் கிஷோரின் சுழல் ஜாலத்தால் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
சேலம்,
8 அணிகள் இடையிலான 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, திருப்பூர் தமிழன்சை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்த திருப்பூர் அணி முதலில்பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் (0). 5-வது பந்திலேயே கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான கவுசிக் காந்தியும் (2 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.
அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த கில்லீஸ் அணிக்கு ரன்ரேட்டும் தளர்ந்தது. இதற்கு மத்தியில் 7-வது வரிசையில் களம் இறங்கிய சசிதேவ் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் சவாலான நிலைக்கு நகர்த்தினார். இறுதியில் சிக்சர், பவுண்டரியுடன் இன்னிங்சை அவர் நிறைவு செய்தார்.
20 ஓவர் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தது. சசிதேவ் 45 ரன்களுடன் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். ராதாகிருஷ்ணன் (24 ரன்), ஹரிஷ்குமாரும் (16 ரன்) கணிசமான பங்களிப்பை அளித்தனர். திருப்பூர் தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட் 3 விக்கெட்டும், மோகன் பிரசாத், மணிகண்டன் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து 134 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய திருப்பூர் பேட்ஸ்மேன்களை, கில்லீஸ் பவுலர்கள் சுழல் ஜாலத்தால் மிரள வைத்தனர். சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த அணியினர் வருவதும் போவதுமாக இருந்தனர். முடிவில் அந்த அணி 19.3 ஓவர்களில் 73 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக அனிருதா 25 ரன் எடுத்தார். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 4 ஓவர்களில் 3 மெய்டனுடன் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து அட்டகாசப்படுத்தினார். டி.என்.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலரின் சிக்கனமான பந்து வீச்சு இது தான். அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் 4 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். இந்த 3 விக்கெட்டுகளையும் அவர் தொடர்ச்சியாக வீழத்தி 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்தினார்.
7-வது ஆட்டத்தில் ஆடி 5-வது வெற்றியை ருசித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தது. தனது கடைசி லீக்கில் ஆடிய திருப்பூர் அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.
இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.