< Back
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம்: ஒரே நாளில் பல சாதனைகளை படைத்த விராட் கோலி
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம்: ஒரே நாளில் பல சாதனைகளை படைத்த விராட் கோலி

தினத்தந்தி
|
17 Jan 2023 4:43 AM IST

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த இந்திய வீரர் விராட் கோலி ஏராளமான சாதனைகளை படைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

திருவனந்தபுரம்,

விராட் கோலி 166 ரன்

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 390 ரன்கள் குவித்தது. அனுபவமில்லாத இலங்கை பந்து வீச்சை துவம்சம் செய்த விராட் கோலி 166 ரன்கள் விளாசி (110 பந்து, 13 பவுண்டரி, 8 சிக்சர்) களத்தில் இருந்தார். அவருக்கு இது 46-வது சதமாகும். முதலாவது ஒரு நாள் போட்டியிலும் அவர் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 116 ரன்கள் (97 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) திரட்டினார்.

அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி, இந்திய பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் 22 ஓவர்களில் 73 ரன்னில் சுருண்டது. இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். நுவானிது பெர்னாண்டோ (19 ரன்), கேப்டன் தசுன் ஷனகா (11 ரன்), கசுன் ரஜிதா (13 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இதன் மூலம் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்ததுடன் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், முகமது ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இலங்கைக்கு எதிராக

10-வது சதம்

இந்த ஆட்டத்தில் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி நிறைய சாதனைகளை நிகழ்த்தினார். அதன் விவரம் வருமாறு:-

* இலங்கைக்கு எதிராக விராட் கோலி அடித்த 10-வது சதம் இதுவாகும். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் நொறுக்கிய வீரர் என்ற மகத்தான சாதனைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு இதே விராட் கோலி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 9 சதங்கள் அடித்திருந்தார். இந்திய முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதங்கள் எடுத்திருந்தார். இதை கடந்து இப்போது கோலி 'நம்பர் ஒன்' ஆக திகழ்கிறார்.

*ஒட்டுமொத்த ஒரு நாள் போட்டியில் அதிக சதங்கள் எடுத்தவர்களின் பட்டியலில் தெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடம் வகிக்கிறார். அவரை முந்துவதற்கு கோலிக்கு இன்னும் 4 சதங்கள் மட்டுமே தேவை. அனேகமாக இந்த ஆண்டுக்குள் 50 சதங்களை எட்டி புதிய வரலாறு படைத்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெண்டுல்கர் சாதனை தகர்ப்பு

*இந்திய மண்ணில் கோலியின் 21-வது சதமாக (101 இன்னிங்ஸ்) இது அமைந்தது. இதன் மூலம் உள்நாட்டில் அதிக சதங்கள் அடித்தவரான தெண்டுல்கரின் (20 சதம், 160 இன்னிங்ஸ்) சாதனையை முறியடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவின் அம்லா, ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் ஆகியோர் தங்களது நாட்டில் தலா 14 சதங்கள் அடித்து அடுத்த இடங்களில் உள்ளனர்.

*விராட் கோலியின் (166) ரன்னுக்கும், இலங்கை ஒட்டுமொத்த அணியினர் எடுத்த ரன்னுக்கும் (73) இடையே உள்ள வித்தியாசம் 93 ரன்னாகும். ஒரு பேட்ஸ்மேனுக்கும், எதிரணியின் ஒட்டுமொத்த ஸ்கோருக்கும் இடையே உள்ள 2-வது அதிகபட்ச வித்தியாசம் இதுவாகும். இதற்கு முன்பு 2000-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 54 ரன்னில் முடங்கிய போது, இலங்கை அணியில் சனத் ஜெயசூர்யா 189 ரன்கள் குவித்து, இந்த வகையில் 135 ரன் வித்தியாசத்தை காட்டியதே அதிகபட்சமாக நீடிக்கிறது.

*ஒரு நாள் போட்டியில் விராட் கோலி இதுவரை 12,754 ரன்கள் (268 ஆட்டம்) சேர்த்து, அதிக ரன் குவித்தவர்களின் வரிசையில் இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனேவை (12,650 ரன்) பின்னுக்கு தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறினார். இந்த வகையில் முதல் 4 இடங்களில் இந்தியாவின் தெண்டுல்கர் (18,426 ரன்), இலங்கையின் சங்கக்கரா (14,234 ரன்), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (13,704 ரன்), இலங்கையின் ஜெயசூர்யா (13,430 ரன்) ஆகியோர் உள்ளனர்.

*கோலி 5-வது முறையாக 150 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இன்னிங்சில் 150-க்கு மேல் அதிகமுறை திரட்டிய தொடக்க ஆட்டக்காரர் அல்லாத வீரர் கோலி தான்.

*8 சிக்சர் தெறிக்கவிட்ட விராட் கோலிக்கு, ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 7 சிக்சரே அதிகபட்சமாக இருந்தது.

*2012-ம் ஆண்டில் டாக்காவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்து இப்போது எடுத்த 166 ரன்களே கோலியின் சிறந்த ஸ்கோராகும்.

இந்தியாவின் 'மெகா' வெற்றி

*இலங்கையை 317 ரன்கள் வித்தியாசத்தில் ஊதித்தள்ளிய இந்திய அணி, 52 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற புதிய வரலாற்றை பதிவு செய்தது. இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு அயர்லாந்தை 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியதே 'மெகா' வெற்றியாக இருந்தது.

*ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா சுவைத்த 96-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற பெருமையை இந்தியா பெறுகிறது. ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்துக்கு எதிராக 95 வெற்றிகளை பெற்று 2-இடம் இடத்தில் இருக்கிறது.

*மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 26 தொடர்களில் விளையாடி இருக்கிறது. இதில் 22 தொடர்களை இழந்துள்ள இலங்கை 4-ஐ டிரா செய்துள்ளது. இந்தியாவில் அந்த அணி எந்த தொடரையும் வென்றதில்லை.

மேலும் செய்திகள்