< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் உதவி பயிற்சியாளராக கார்ல் ஹூப்பர் நியமனம்...!
கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் உதவி பயிற்சியாளராக கார்ல் ஹூப்பர் நியமனம்...!

தினத்தந்தி
|
2 Jun 2023 2:54 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணியின் உதவி பயிற்சியாளராக கார்ல் ஹூப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

10 அணிகள் இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன.

மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி தகுதி சுற்று போட்டி ஜூன் 18-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா, 'பி' பிரிவில் முன்னாள் சாம்பியன் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றை அடையும். இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு வெண்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹூப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடி உள்ளார். 329 சர்வதேச போட்டிகளில் விளையாடி 10,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஹூப்பர் பல்வேறு நிலைகளில் பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். 56 வயதான அவர் பிக் பாஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராகவும் கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆன்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்