ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய சில வினாடிகளில் எரிந்து சாம்பலான கார்: பஸ் பணியாளர் பேட்டி
|விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டை வெளியே இழுத்து வந்த சில வினாடிகளில் கார் எரிந்து சாம்பலானது என அவரை காப்பாற்றிய பஸ் பணியாளர் பேட்டியில் கூறியுள்ளார்.
டேராடூன்,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். இவர் நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். காரை ரிஷப் பண்டே ஓட்டி சென்றார்.
டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஹம்மத்பூர் ஜல் என்ற இடத்திற்கு அருகே ரூர்கியின் நர்சன் எல்லை பகுதியில் அதிவேகமாக சென்றபோது, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு, டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விபத்தில் சிக்கிய பண்ட்டை அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் காப்பாற்றியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது. அரியானா போக்குவரத்து கழகத்தின் பானிபட் டெப்போவுக்கு உட்பட்ட பஸ் ஓட்டுனர் சுஷில் குமார் மற்றும் நடத்துனர் பரம்ஜீத் இருவரும் அந்த வழியே சென்றுள்ளனர்.
அவர்களில் நடத்துனரான பரம்ஜீத் செய்தியாளர்களிடம் கூறும்போது, கட்டுப்பாட்டை இழுந்த கார் ஒன்று குருகுல் நர்சான் பகுதியருகே சாலை நடுவே உள்ள தடுப்பானில் மோதி விபத்திற்குள்ளானது.
இதனால், அந்த பயணியை காப்பாற்ற ஓடி சென்றோம். நாங்கள் அவரை (பண்ட்) காரில் இருந்து வெளியே இழுத்தவுடன், 5 முதல் 7 வினாடிகளில் கார் தீப்பற்றி எரிந்தது.
அதன்பின் கார் முழுவதும் சாம்பலானது. அவரது பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அவரது தனிப்பட்ட விவரம் பற்றி நாங்கள் கேட்டோம். அதற்கு அவர், இந்திய கிரிக்கெட் வீரர் என கூறினார் என்று பரம்ஜீத் தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து பானிபட் பஸ் டெப்போவின் பொது மேலாளர் கே. ஜாங்க்ரா, ரிஷாப் பண்ட்டை காப்பாற்றிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரையும் போக்குவரத்து துறை சார்பில் கவுரவப்படுத்தினார்.
அவர்கள் இருவருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டு உள்ளது. மனித தன்மையுடன் செயலாற்றியதற்காக, அவர்களுக்கு மாநில அரசும் கவுரவம் அளிக்கும் என்று ஜாங்க்ரா கூறியுள்ளார்.