சக வீரர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளித்த பட்லர்.. குவியும் பாராட்டு- வைரல் வீடியோ
|ரஷித், மொயின் அலி மேடையை விட்டு செல்லும் வரை தனது அணி வீரர்களை பட்லர் காத்திருக்க சொன்னார்.
மெல்போர்ன்,
மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது. பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
வெற்றிக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் தனது அணி வீரர்களுடன் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த நிகழ்வின்போது இங்கிலாந்து அணி வீரர்களான அடில் ரஷித் மற்றும் மொயின் அலி உடனிருந்தனர்.
அப்போது மற்ற வீரர்கள் "ஷாம்பெயின்" குலுக்க தயாராக இருந்தனர். இதை பார்த்த பட்லர் தங்கள் அணி வீரர்களிடம் அடில் ரஷித் மற்றும் மொயின் அலி செல்லும்வரை காத்திருக்க சொன்னார். இதையடுத்து, அவர்கள் மேடை தளத்திலிருந்து வெளியேறும் வரை காத்திருந்து அதன்பிறகு ஷாம்பெயினை குலுக்கி தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
விளையாட்டானது மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது என்றாலும், சக இஸ்லாம் வீரர்களின் மத நம்பிக்கைக்கு மரியாதை அளித்த பட்லர் மற்றும் சக வீரர்களை இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.