பிட்டாக இல்லையென்றால் அணியில் இடம் பெற முடியாது - பாகிஸ்தான் பயிற்சியாளர்
|பிட்டாக இல்லையென்றால் அணியில் இடம் பெற முடியாது என பாகிஸ்தான் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
கராச்சி,
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் வங்காளதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 21ம் தேதி தொடங்குகிறது.
பாகிஸ்தான் அணிக்கு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு (ஒருநாள் மற்றும் டி20) கேரி கிரிஸ்டனையும், சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு (டெஸ்ட்) ஜேசன் கில்லெஸ்பியையும் பயிற்சியாளர்களாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, பிட்டாக இல்லையென்றால் டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாது என எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,
ஒரு தேசிய அணியில் ஒரு வீரர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை என்றால் அவருடைய மதிப்பு கேள்விக்குறியாக மாறுகிறது. ஒரு வீரரை பற்றி ஏதேனும் கருத்துக்கள் வெளியில் இருந்தால், அதை அந்த குறிப்பிட்ட வீரர் தன்னுடைய செயல் திறனின் மூலமாக மட்டும்தான் மாற்ற வேண்டும்.
என்னுடைய மந்திரம் என்னவென்றால் உடல் பிட்டாக, ஆரோக்கியமாக, வலிமையானதாக இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமில்லாமல் நவீன கிரிக்கெட்டில் இது மிக அவசியம். இல்லையென்றால் அணியில் இடம் பெற முடியாது. என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் என்பது எப்போதுமே செஷன் டு செஷன் விளையாடுவதும், வாய்ப்பு வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வதும் ஆகும்.
பாகிஸ்தான் தங்களுடைய பாணியில் விளையாடி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாகிஸ்தானுக்கு நன்றாகச் செயல்படும் திறமை இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இவர்கள் தொடர்ந்து நன்றாக செயல்படுவதற்கு இவர்களை ஒன்றாக இணைப்பது தான் முக்கிய வேலை. இவ்வாறு அவர் கூறினார்.