எல்லா போட்டியிலும் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது: ஐதராபாத் தலைமை பயிற்சியாளர் வெட்டோரி
|பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது
ஐதராபாத்,
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 17-வதுஐ.பி.எல். தொடரின் 41-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடந்த பல போட்டிகளாகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சன்ரைசர்ஸ் எளிதாக பெங்களூரு அணியை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 171 ரன்களை மட்டுமே அடித்ததால் 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் வெட்டோரி கூறியதாவது,
எங்கள் அணி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தொடக்க வீரர்களாக அமைக்கப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இன்றைய நாள் (நேற்று) அவர்களுடையதாக அமையவில்லை. கிரிக்கெட்டில் இதுபோன்ற நாட்கள் அமையும். 14 போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. துரதிருஷ்டவசமாக நாங்கள் மிடில் ஆர்டர் வரிசையில் ஆதரவு பெற முடியவில்லை.இது கடினமான தோல்விதான். ஐபிஎல் போட்டியில் எளிதான போட்டி என்று கிடையாது.இவ்வாறு வெட்டோரி தெரிவித்துள்ளார்.