டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா நேரங்களிலும் அட்டாக் செய்து விளையாட முடியாது - இந்திய வீரருக்கு டி வில்லியர்ஸ் அறிவுரை
|இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.
கேப்டவுன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார். அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 707-ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு விக்கெட்டுகளை இழப்பதாக அவர் மீது ஒரு விமர்சனம் இருந்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக அவரை ரஞ்சி போட்டியில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது. தற்போது ரஞ்சி போட்டியில் விளையாடி விட்டு இங்கிலாந்து தொடருக்காக காத்திருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இனி நான் தொடர்ந்து அட்டாக்கிங் முறையில்தான் விளையாடப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ், ஸ்ரேயாஸ் ஐயருக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.அதில், இங்கிலாந்து தொடரில் ஸ்ரேயாஸ் அட்டாக்கிங் முறையில்தான் விளையாடப் போவதாக கூறியுள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா நேரங்களிலும் அட்டாக் செய்து ரன்களை சேர்க்க முடியாது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகே நமது உடல் வலிமை, மனவலிமை மற்றும் சூழல் ஆகிய அனைத்தையும் சோதிப்பதுதான். டெஸ்ட் போட்டிகளில் ஒருநாள் முழுவதும் நின்று ரன்களை சேர்க்க வேண்டும் என்றால் பல்வேறு விஷயங்கள் சவாலாக இருக்கும். அவற்றையெல்லாம் அனுபவத்தின் மூலம்தான் கற்றுக்கொள்ள முடியும்' என்று கூறினார்.