பும்ராவா...ஷமியா...உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தப்போவது யார்..? - கவுதம் கம்பீர் பதில்
|இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையே போட்டி நிலவுகிறது. இதில் அரையிறுதிக்கு முன்னேற நியூசிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தற்போது வரை 8 லீக் ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் வெற்றி பெற்று நம்பர் 1 அணியாக திகழ்கிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமாக விளங்குவது இந்திய வேகப்பந்து வீச்சுதான். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது அபாரமான ஆட்டத்தால் எதிரணியின் விக்கெட்டுகளை சீக்கிரம் வீழ்த்துவது வெற்றிக்கு பெரிதும் உதவுகிறது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடர் முடிவடையும்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவரில் யார் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பார் என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
இந்திய அணியின் மிகச்சிறந்த பவுலர் பும்ராதான். அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. பும்ரா பவர் பிளேவில் தொடர்ந்து மிரட்டலாக பந்துவீசுகிறார். பும்ரா இப்படி அபாரமாக பந்துவீசுவதால், முதல் 10 ஓவர்களில் குறிப்பாக பும்ராவுக்கு எதிராக தடுப்பாட்டத்தில் ஆடி பேட்ஸ்மேன்கள் தப்பித்துவிடுகிறார்கள்.
பும்ராவிடம் தப்பித்துவிடும் பேட்ஸ்மேன்கள், முகமது ஷமியை டார்கெட் செய்து ரன்களை அடிக்கப் பார்க்கிறார்கள். இதனால்தான், ஷமியால் குறைந்த போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்த முடிகிறது. இனி வரும் போட்டிகளிலும் இவர்தான் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார்.
பும்ரா ரன்களை சிக்கனமாக விட்டுக்கொடுக்கத்தான் முடியும். அதிக விக்கெட்களை வீழ்த்த முடியாது. காரணம், பும்ராவை நிதானமாக ஆடுகிறார்கள். ஷமியை அதிரடியாக எதிர்கொள்ள முற்பட்டு விக்கெட்களை விட்டுக்கொடுக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதுவரை நடந்த ஆட்டங்களில் ஷமி 4 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டும், பும்ரா 8 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.