உருவ கேலி செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த பும்ரா மனைவி
|இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளரும், மாடலுமான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மும்பை,
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா. இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், மாடலுமான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2021-ம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பும்ரா - சஞ்சனா கணேசன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பின் குழந்தையுடன் நேரம் செலவிடும் புகைப்படங்களை பும்ரா அவ்வப்போது வெளியிட்டு வந்தார். ஆனால் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அதிகளவில் பதிவிடவில்லை. இந்நிலையில் பும்ரா - சஞ்சனா கணேசன் ஜோடி இணைந்து காதலர் தினத்தை முன்னிட்டு விளம்பர வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.
அந்த வீடியோவுக்கு ரசிகர் ஒருவர் அண்ணியின் உடல் கொஞ்சம் குண்டாக உள்ளது என்று உருவக் கேலி செய்தார். அந்த கமெண்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சஞ்சனா கணேசன், உன் பள்ளியில் கொடுக்கப்படும் அறிவியல் புத்தகத்தில் உள்ள பாடத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது.
ஆனால் ஒரு பெண்ணின் உடல் வடிவம் பற்றி இங்கு கருத்து கூறுகிறாய். ஒழுங்காக இங்கிருந்து ஓடிவிடு என்று பதில் அளித்துள்ளார். இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2014-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட சஞ்சனா கணேசன் இறுதிச்சுற்று வரை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.