இங்கிலாந்து வீரர்களின் எச்சரிக்கைக்கு பும்ரா பதிலடி
|இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.
ஐதராபாத்,
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.
சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் நம்புகின்றனர். ஏனெனில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.
ஆனால் இப்போது நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடுகிறோம் என்பதால் இந்தியாவை வீழ்த்தி சாதித்து காட்டுவோம் என்று இங்கிலாந்து அணியின் பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வேகமாக ரன்கள் குவிக்கும் முனைப்புடன் பேட்டிங் செய்வதை தாங்களும் எதிர்பார்ப்பதாக ஜஸ்பிரித் பும்ரா பதிலடி கொடுத்துள்ளார். ஏனெனில் வேகமாக ரன்கள் எடுக்க முயற்சிக்கும்போது வழக்கத்தை விட தம்மை போன்ற பவுலர்களும் வேகமாக அதிக விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியதாவது ;-
"பேஸ்பால் என்ற சொல்லுடன் உண்மையில் எனக்கு தொடர்பில்லை. ஆனால் அவர்கள் வெற்றிகரமான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆக்ரோஷமான பாதையில் விளையாட மற்றொரு வழி இருக்கிறது என்பதை அவர்கள் இந்த உலகிற்கு காண்பிக்கின்றனர். அதே சமயம் ஒரு பவுலராக அது என்னை சிறப்பாக விளையாட வைக்கும் என்று நினைக்கிறேன்.
அதாவது அவர்கள் வேகமாக விளையாடும்போது என்னுடைய பந்துவீச்சில் ஆட்டமிழக்க வாய்ப்பு உண்டு. அதனால் எனக்கு நிறைய விக்கெட்டுகள் கிடைக்கும். அந்த வகையில் இது போன்ற அம்சங்களை எப்படி எனக்கு சாதகமாக பயன்படுத்துவது என்பதை பற்றி நான் எப்போதும் நினைப்பேன். இருப்பினும் இப்படி அதிரடியாக விளையாடுவதற்கான பாராட்டுகள் இங்கிலாந்தை சேரும். ஆனால் ஒரு பவுலராக அது போன்ற போட்டியில் நீங்கள் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்துவீர்கள்"இவ்வாறு அவர் பேசினார்.