< Back
கிரிக்கெட்
டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகள்தான் பிடிக்கும் - பும்ரா
கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகள்தான் பிடிக்கும் - பும்ரா

தினத்தந்தி
|
19 April 2024 10:07 AM IST

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் பும்ரா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

சண்டிகர்,

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78, ரோகித் சர்மா 36 ரன்கள் எடுக்க பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப்புக்கு கேப்டன் சாம் கரண் 16, ரிலீ ரோசவ் 1, லியாம் லிவிங்ஸ்டன் 1, ஜிதேஷ் சர்மா 9 ரன்கள் என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே மும்பையின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட் ஆகிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 14 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகள் என சரிந்து தடுமாறிய பஞ்சாப் 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அதிரடியாக விளையாடிய சஷாங் சிங் 41 (25 பந்துகள்) ரன்கள் விளாசி போராடி அவுட்டானார். எதிர்ப்புறம் கடைசி நேரத்தில் மும்பையை அடித்து நொறுக்கிய இளம் வீரர் அசுதோஷ் சர்மா 61 (28 பந்துகள்) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார்.

இருப்பினும் 19.1 ஓவரில் பஞ்சாப்பை 183 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றி பெற்ற மும்பை சார்பில் அதிகபட்சமாக பும்ரா, ஜெரால்ட் கோட்சி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றிக்கு 4 ஓவரில் வெறும் 21 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் 2 ஓவர்களுக்கு மேல் பந்து ஸ்விங் ஆவதில்லை என்று தெரிவிக்கும் பும்ரா இம்பேக்ட் வீரர் விதிமுறை பவுலர்களுக்கு கடினத்தை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார். அதனாலயே டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகள் தமக்கு பிடிக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"நாங்கள் நினைத்ததை விட இந்த போட்டி மிகவும் நெருக்கமாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் பந்து 2 ஓவர்கள் ஸ்விங் ஆகும். எனவே நான் அதிகமாக பந்து வீச விரும்பும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவேன். அதுவே என்னுடைய ஆசையை திருப்தி செய்யும்.

நேரம் குறைவு, இம்பேக்ட் வீரர் விதிமுறை போன்றவையால் டி20 போட்டிகள் பவுலர்களுக்கு கடினமாக மாறியுள்ளது. பேட்டிங் வரிசையும் ஆழமாகியுள்ளது. ஆனால் அது உங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் பவுலர்களுக்கு சில மெசேஜ்களை கொடுக்கிறேன். இருப்பினும் அழுத்தமான தருணத்தில் நீங்கள் அதிகமான மெசேஜ்களை கொடுக்க விரும்ப மாட்டீர்கள்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்