< Back
கிரிக்கெட்
ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை சமன் செய்த பும்ரா...!
கிரிக்கெட்

ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை சமன் செய்த பும்ரா...!

தினத்தந்தி
|
5 Jan 2024 3:38 PM IST

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று முன்தினம் தொடங்கியது. வெறும் 2 நாளிலேயே முடிவடைந்த இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு சிராஜ் மற்றும் பும்ரா முக்கிய பங்கு வகித்தனர். முதல் இன்னிங்கில் சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுத்த நிலையில், 2வது இன்னிங்ஸில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஜஸ்பிரித் பும்ரா 2 போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக 12 விக்கெட்களை எடுத்து அசத்தினார். அதன் காரணமாக தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இதன் மூலம் சேனா நாடுகள் எனப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய சவாலான வெளிநாடுகளில் அதிக முறை தொடர்நாயகன் விருதுகளை வென்ற 2வது இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில் தேவின் ஆல் டைம் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இந்த பட்டியலில், 3 முறை வென்று ராகுல் டிராவிட் முதலிடத்திலும், தலா 2 முறை வென்று பும்ராவும், கபில்தேவும் 2-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் இந்த போட்டியில் 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தமாக 86 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த 2வது இந்திய பவுலர் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:

1. வெங்கடேஷ் பிரசாத் : 10/153 (1996)

2. ஜஸ்பிரித் பும்ரா : 8/86 (2024)

3. ஸ்ரீசாந்த் : 8/99 (2006)

4. ஜவகல் ஸ்ரீநாத் : 8/104 (2001)

மேலும் செய்திகள்