"பும்ரா இனி அனைத்து தரப்பு கிரிக்கெட்டிலும் ஒருசேர விளையாடுவது சந்தேகம்தான்" - ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் கருத்து
|இந்திய அணிக்காக நீண்ட காலம் பங்களிக்க வேண்டும் என்றால், பும்ரா மிகத்தெளிவாக முடிவெடுக்க வேண்டும் என ஜெஃப் தாம்சன் கூறியுள்ளார்.
சிட்னி,
ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புபான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் (பாகிஸ்தான் ,நெதர்லாந்து) அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 3-வது போட்டியில் நாளை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.
இதனிடையே காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நடப்பு உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். இந்த நிலையில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் ஆகிய அனைத்து தரப்பு கிரிக்கெட்டிலும் பும்ரா இனி ஒருசேர விளையாடுவது சந்தேகம் தான் என்றும், அவருக்கு ஏற்படும் காயங்களே இதனை அப்பட்டமாக காட்டுவதாகவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஜெஃப் தாம்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக நீண்ட காலம் பங்களிக்க வேண்டும் என்றால், பும்ரா இதில் மிகத்தெளிவாக முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.