எப்படி பேட்டிங் செய்வது என்பதை வளரும் வீரர்கள் ரோகித்திடம் கற்றுக்கொள்ளுங்கள்.. முகமது கைப் கருத்து
|இந்திய மைதானங்களில் எப்படி பேட்டிங் செய்வது என்பதை வளரும் வீரர்கள் ரோகித் சர்மாவிடம் கற்றுக்கொள்ள வேண்டுமென முகமது கைப் கூறியுள்ளார்.
டெல்லி,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த டெஸ்ட் தொடரில் ஸ்பின்னை பயன்படுத்துவதில் ஓரளவிற்கு தேறிய ஆஸ்திரேலிய அணி, இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் கோட்டைவிட்டது. இந்திய அணியின் முன்னணி வீரர்களான கோலி, புஜாரா ஆகியோரும் திணறும் நிலையில், ரோகித் சர்மா ஸ்பின்னர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடி முதல் டெஸ்ட்டில் சதமடித்து 120 ரன்களை குவித்தார்.
சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி ஆடவேண்டும் என்று வளர்ந்துவரும் வீரர்கள் ரோகித் சர்மாவின் பேட்டிங்கை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முகமது கைப் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து முகமது கைப் கூறுகையில், ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளார். நிறைய ரன்களை அடித்துவருகிறார். ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி பேட்டிங் ஆடவேண்டும் என்பதை ஆடியே காட்டுகிறார்.
லாங் ஆனில் பீல்டரே நின்றாலும் கூட, அவரது தலைக்கு மேல் தூக்கி சிக்சர் அடிக்கிறார். லாங் ஆனில் பீல்டர் நின்றாலும் தனது திறமை மீது நம்பிக்கை வைத்து சிக்சர் அடிக்கிறார்.
வளர்ந்துவரும் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும், ரோகித் சர்மா பந்தை எந்த திசையில் எப்படி அடிக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். ரோகித் சர்மா ஆடும் விதத்தை பார்க்கையில், கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடுவார். இவ்வாறு முகமது கைப் தெரிவித்துள்ளார்.