புச்சிபாபு கிரிக்கெட்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி 344 ரன் குவிப்பு
|தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
கோவை,
புச்சிபாபு நினைவு அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நேற்று முன்தினம் தொடங்கியது. நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடக்கும் இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்- கேரளா இடையிலான லீக் ஆட்டம் நெல்லையில் நடக்கிறது. இதில் முதலில் பேட் செய்த கேரளா 218 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி 2-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 344 ரன்கள் குவித்து 126 ரன் முன்னிலை பெற்றுள்ளது. மாதவா பிரசாத் (72 ரன்), கேப்டன் ஷாருக்கான் (60 ரன்), நிதிஷ் ராஜகோபால் (90 ரன்) அரைசதம் அடித்தனர்.
கோவையில் நடக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவனுக்கு எதிரான ஆட்டத்தில் 4-251 ரன் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 2-வது நாளில் தொடர்ந்து ஆடிய இந்தியன் ரெயில்வே 327 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.