இந்திய அணியில் அந்த வீரருக்கு பதில் இவரை சேருங்கள் - ஹர்பஜன் சிங் கருத்து
|இந்திய அணியில் அந்த வீரருக்கு பதில் இவரை சேருங்கள் என ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
தர்மசாலா,
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 19ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் மோதின. இதில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தின் போது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக யாரை கொண்டுவர வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறுகையில், ஹர்திக் பாண்டியா முழு உடல்தகுதி பெறவில்லை என்றால் அது இந்தியாவுக்கு பிரச்சினை தான். அவர் அணியை முழுமையாக்குகிறார். அவர் விளையாடவில்லையென்றால் அணியை மாற்றியமைக்க வேண்டும். முழுமையாக பேட்டிங் மட்டுமே கருத்தில் கொண்டால் நீங்கள் இஷான் கிஷன் அல்லது சூர்யகுமாரை அணியில் சேர்க்க வேண்டும். ஆல்ரவுண்டர் திறன் உள்ளதால் நாம் ஷர்துல் தாகூருடன் விளையாடுகிறோம். ஆனால், ஷர்துல் தாகூருக்கு பதில் நாம் முகமது ஷமியை அணியில் சேர்க்க வேண்டும். ஏனென்றால் ஷமி முழுமையாக 10 ஓவர்கள் வீசக்கூடியவர்' என்றார்.