வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டனாக பிரன்டன் கிங் நியமனம்
|தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஆடும் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பிரன்டன் கிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிங்ஸ்டன்,
20 அணிகள் பங்கேற்கும் 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் தென்ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. எஞ்சிய இரு ஆட்டங்கள் இதே மைதானத்தில் 25 மற்றும் 26-ந்தேதிகளில் நடக்கிறது.
இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோமன் பவெல் (ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக) தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடி வருவதால் அவர் தென்ஆப்பிரிக்க தொடரில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக தற்காலிக கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் பிரன்டன் கிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல் ஆந்த்ரே ரஸ்செல், ரூதர்போர்டு (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), ஹெட்மயர் (ராஜஸ்தான்), அல்ஜாரி ஜோசப் (பெங்களூரு) ஆகியோரும் பிளே-ஆப் சுற்றில் விளையாட இருப்பதால் சர்வதேச போட்டியை தவறவிடுகிறார்கள். அதே நேரத்தில் நிகோலஸ் பூரன் (லக்னோ), ஷாய் ஹோப் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோருக்குரிய ஐ.பி.எல். அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறி விட்டன. ஆனாலும் அவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஓய்வு அளித்துள்ளது. பெங்களூரு அல்லது கொல்கத்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறாவிட்டால் ரூதர்போர்டு, அல்ஜாரி ஜோசப் ஆகியோர் வெஸ்ட்இண்டீஸ் அணியில் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் சேமி கூறுகையில், 'ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு நாங்கள் ஒரு அணியாக இணைந்து விளையாடவில்லை. ஆனால் ஆன்டிகுவாவில் வீரர்களுக்கான தீவிரமான ஒரு பயிற்சி முகாமை நிறைவு செய்துள்ளோம். ஐ.பி.எல். போட்டியை முடித்து சில வீரர்கள் திரும்பியதும் தங்களுக்குள் ஒருங்கிணைந்து, உலகக் கோப்பைக்கு முன்பாக நல்ல உத்வேகத்தை உருவாக்குவதற்கு இது ஒரு வாய்ப்பாகும்' என்றார்.
தென்ஆப்பிரிக்க தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி வருமாறு:-பிரன்டன் கிங் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், அலிக் அதானேஸ், ஜான்சன் சார்லஸ், ஆந்த்ரே பிளட்செர், மேத்யூ போர்டு, ஜாசன் ஹோல்டர், அகில் ஹூசைன், ஷமார் ஜோசப், கைல் மேயர்ஸ், ஒபெட் மெக்காய், குடகேஷ் மோட்டி, ரொமாரியா ஷெப்பர்டு, ஹைடன் வால்ஷ்.
தென்ஆப்பிரிக்க அணியிலும் ஐ.பி.எல். போட்டி காரணமாக டேவிட் மில்லர், கிளாசென், மார்க்ரம், மார்கோ யான்சென் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.