விக்கெட் வீழ்த்தியதை கொண்டாடிய பவுலர்... அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம்... காரணம் என்ன?
|ஐ.பி.எல். நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக கொல்கத்தா பவுலர் ஹர்ஷித் ராணாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது ஆறாவது ஓவரை வீசிய கொல்கத்தா பவுலர் ஹர்ஷித் ராணா, மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்தினார். மயங்க் அகர்வால் அவுட் ஆகி வெளியேறும்போது அவரைப் பார்த்து சிரித்த ஹர்ஷித் ராணா அவருக்கு கைகளால் முத்தத்தை பறக்க விட்டு, பின் முறைத்துப் பார்த்தார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
இதனை பார்த்த அனைவரும் இந்திய அணிக்காக ஆடி இருக்கும் ஒரு வீரரை, அதுவும் இரண்டு இரட்டை சதம் அடித்து இருக்கும் வீரரிடம் ஒரு இளம் இந்திய பவுலர் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐ.பி.எல். நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஹர்ஷித் ராணாவிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டு விதிமீறல்களை செய்ததாக போட்டி நடுவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு விதிமீறல்களையும் ஹர்ஷித் ராணா ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் இவருக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.