எம்.எஸ். தோனிக்கு தலைவணங்குகிறேன் - லக்னோ அணியின் ஆல் ரவுண்டர்
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் எம்.எஸ். தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார்.
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சி.எஸ்.கே. அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57 ரன்களையும், ரஹானே 36 ரன்களையும், இறுதி கட்டத்தில் களமிறங்கிய தோனி 9 பந்துகளில் 28 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 19 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 180 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக கே.எல் ராகுல் 82 ரன்களையும், குவிண்டன் டி காக் 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் இப்போட்டியில் கடைசி நேரத்தில் வந்து 28* (9) ரன்கள் விளாசி அற்புதமாக பினிஷிங் செய்த எம்.எஸ். தோனிக்கு தலைவணங்குவதாக லக்னோ அணியின் ஆல் ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இன்னும் சில நாட்களில் மீண்டும் சென்னை அணியை சேப்பாக்கத்தில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"இது எங்களுக்கு முக்கியமான வெற்றியாகும். இன்னும் சில நாட்களில் மீண்டும் சென்னையை நாங்கள் சந்திக்க உள்ளோம். அதற்கு முன்பாக வெற்றிப் பாதைக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. பந்து வீச்சில் நன்றாக துவங்கிய நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்களை எடுத்தோம். இருப்பினும் கடைசியில் நன்றாக பினிஷிங் செய்த சி.எஸ்.கே.வுக்கு பாராட்டுக்கள். குறிப்பாக எம்.எஸ்.தோனிக்கு தலைவணங்குகிறேன்.
குவின்டன் டி காக் - கே.எல். சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றியை உறுதி செய்தனர். ஆரம்பத்திலேயே அவர்கள் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்ததால் மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களின் திட்டத்தில் விளையாடினார்கள். ஒரு அணியாக நாங்கள் தன்னம்பிக்கையை கொண்டுள்ளோம். எங்களுடைய அணியில் பல வீரர்கள் பல்வேறு தருணங்களில் வந்து வெற்றியை பெற்றுக் கொடுக்கின்றனர்" என்று கூறினார்.