உலகக்கோப்பையை வெல்ல இந்த இரு அணிகளுக்கே அதிக வாய்ப்பு - குமார் சங்கக்காரா
|இந்தியாவில் அடுத்த மாதம் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.
கொழும்பு,
இந்தியாவில் அடுத்த மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் உள்ளிட்டவை குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியுள்ள இரு அணிகள் எவை என்பவை குறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். ஏனெனில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதோடு தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் உலகக்கோப்பை தொடரிலும் சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போதுள்ள இந்திய அணி அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என சரியான கலவையில் அமைந்துள்ளதால் சொந்த மைதானத்தில் கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இந்திய அணியை அடுத்து இங்கிலாந்து அணிக்கு அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியினர் தொடர்ச்சியான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமீபத்திய தொடர்களில் கூட மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வரும் வேளையில் இந்தியாவில் நடக்கும் இந்த உலகக்கோப்பை தொடரிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.