பார்டர் கவாஸ்கர் கோப்பை: இந்தியாவின் வெற்றி அவர்கள் கையில்தான் உள்ளது - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.
அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இம்முறை தயாராக இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். எனவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களிடம் சிரமத்தை சந்திப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்தியாவின் வெற்றி ரோகித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், கில் போன்ற பேட்ஸ்மேன்களின் கையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏனெனில் இந்தியாவின் பவுலிங் அபாரமாக இருப்பதாக தெரிவிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு கொஞ்சம் முன்னதாகவே செல்ல வேண்டும். இம்முறை இந்தியா சிறந்த பவுலிங் அட்டாக்கை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும். ஏனெனில் பும்ரா தனது கெரியரின் உச்சத்தில் இருக்கிறார். ஷமி கம்பேக் கொடுக்கத் தயாராகி வருகிறார். முகமது சிராஜ் திறமையை மறந்து விடாதீர்கள். அவர்களுடன் ஆகாஷ் தீப் இருக்கிறார். எனவே வேகப்பந்து வீச்சு இந்திய அணிக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்களால் ஆஸ்திரேலியர்கள் கொஞ்சம் கடினத்தை சந்திப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் இந்தியா நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் பாரத்தை கண்டிப்பாக சுமக்க வேண்டும். இது ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு பெரிய சோதனையாக இருக்கும். ஒருவேளை அதை கடந்து இந்தியா வந்தால் ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு தொடரை வெல்லலாம்" என்று கூறினார்.