பார்டர் - கவாஸ்கர் கோப்பை: அவரை தாண்டி இந்திய அணி வெல்வது கடினம் - ஹெய்டன்
|பேட் கம்மின்ஸ் மிகவும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டுள்ளதாக மேத்யூ ஹெய்டன் பாராட்டியுள்ளார்.
சிட்னி,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 தொடர்களில் இருந்த டின் பெய்னை விட ஆஸ்திரேலியாவின் தற்போதைய கேப்டன் பேட் கம்மின்ஸ் மிகவும் வித்தியாசமான ஸ்டைலை கொண்டுள்ளதாக மேத்யூ ஹெய்டன் பாராட்டியுள்ளார். எனவே இம்முறை அவரைத் தாண்டி இந்தியா வெல்வது கடினம் என்றும் ஹெய்டன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:-"கம்மின்ஸ் எங்களுடைய விளையாட்டின் சிறந்தவர். அவரிடம் ஸ்பெஷலான கேப்டன்ஷிப் ஸ்டைல் மற்றும் திறன் உள்ளது. அவர் ஆஸ்திரேலிய அணியின் மற்ற முன்னாள் கேப்டன்களை விட வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவர். அவர் ஒரு மாடலை பின்பற்றி செயல்படுகிறார். குறிப்பாக அணி விளையாட்டான கிரிக்கெட்டில் அவர் தனிநபர்கள் தடுமாறக்கூடிய விஷயங்களில் சிறப்பாகும் தயாராகும் வழிமுறைகளை கொண்டு வருகிறார்.
ஏனெனில் இறுதியில் வெற்றி என்பது ஒரு தனி நபரிடமிருந்து நீங்கள் எவ்வாறு சிறந்ததை பெறுகிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகும். எனவே அவரை தாண்டி வெல்வது கடினம். இப்போதைய ஆஸ்திரேலிய அணியை நான் கடந்த 2 வருடங்களாக நெருக்கமாக பின்தொடர்கிறேன். அவர்கள் சிறந்த அணி. கம்மின்ஸ் எங்களின் சிறந்த கேப்டனாக செல்வார்" என்று கூறினார்.