பார்டர்-கவாஸ்கர் தொடர்: கடைசி டெஸ்டிலும் ஸ்மித் தலைமையில் களம் இறங்கும் ஆஸ்திரேலியா...!
|குடும்ப விவகாரம் தொடர்பாக கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.
அகமதாபாத்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் குடும்ப விவகாரம் தொடர்பாக பேட் கம்மின்ஸ் திடீரென ஆஸ்திரேலியா சென்றார்.
3-வது டெஸ்ட் தொடங்குவதற்குள் கம்மின்ஸ் இந்தியா திரும்பிவிடுவார் என்று முதலில் தகவல் வெளியானது. இந்நிலையில், பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்பட்டதால் 3வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்தினார்.
ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அந்த டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சிலும் 109 மற்றும் 163 ரன்னில் சுருட்டியதோடு மட்டுமின்றி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 4வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியையும் ஸ்டீவ் ஸ்மித்தே வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னர் பேட் கம்மின்ஸ் இந்தியா வந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்தியா வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 4வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.