இந்திய ஜெர்சியில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்'; பிசிசிஐ-க்கு வீரேந்திர சேவாக் கோரிக்கை
|உலகக்கோப்பையில் இந்திய ஜெர்சியில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்' என்ற பெயரைப் பயன்படுத்துமாறு பிசிசிஐ-க்கு வீரேந்திர சேவாக் கோரிக்கை விடுத்துள்ளார்.
புது டெல்லி,
குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. இதனால் 'இந்தியா' என்ற பெயரை 'பாரத்' என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.
இந்த உலகக்கோப்பை தொடரில் கோலி, ரோகித், பும்ரா, ஜடேஜா ஆகியோரை உற்சாகப்படுத்தும் அதே சமயம் பாரதத்தை நம் மனதில் வைப்போம் என பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் ஜெர்சியில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்' என்ற பெயரைப் பயன்படுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் எனவும் சில நாடுகள் பெயர்களை மாற்றியதை உதாரணமாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1996ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணி ஹாலந்து என்ற பெயரில் விளையாட வந்தது. பின் 2003ல் திரும்ப அவர்களுடன் விளையாடும் போது நெதர்லாந்து என்று மாற்றி அப்படியே தொடர்கிறது. ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை 'பர்மா' 'மியான்மர் ' என்று மாற்றிவிட்டது என்று பதிவிட்டுள்ளார்.