தோல்விகளுக்கு வீரர்கள் காரணமல்ல பெங்களூரு அணி நிர்வாகம் தான் காரணம் - இந்திய முன்னாள் வீரர்
|ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு,
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 287 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் டிராவிஸ் ஹெட் 102 ரன், கிளாசென் 67 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 288 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 83 ரன்கள் அடித்தார். இதன் மூலம் 25 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் மட்டுமல்ல ஆர்.சி.பி அணி தோல்வியடைந்த அனைத்து ஆட்டங்களிலும் அந்த அணி சரியாக பந்துவீசாததே காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பெங்களூரு அணியை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தோல்விகளுக்கு வீரர்கள் காரணமல்ல பெங்களூரு அணி நிர்வாகம் தான் காரணம் என்று முன்னாள் இந்திய கேப்டன் கிறிஸ் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு, ரீஸ் டாப்லி அடித்து நொறுக்கப்பட்டார். லாக்கி பெர்குசன் விளாசப்பட்டார். அவர் ஐ.பி.எல் தொடரில் அசத்தியதில்லை. வில் ஜேக்ஸ் ஆர்சிபி அணியின் சிறந்த பவுலர்.
பேசாமல் அவர்கள் 11 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கலாம். பிளெஸ்சிஸை 2 ஓவர்கள் வீசச் சொல்லுங்கள். கேமரூன் கிரீனுக்கு 4 ஓவர்கள் கொடுங்கள். ஒருவேளை விராட் கோலி 4 ஓவர்கள் வீசியிருந்தால் கூட இவ்வளவு ரன்கள் கொடுத்திருக்க மாட்டார். விராட் கோலி ஓரளவு நல்ல பவுலர். ஒரு கட்டத்தில் மைதானத்திற்கு வெளியே பறந்த பந்துகளை பார்த்து பரிதாபமாக நின்ற விராட் கோலிக்காக நான் வருத்தமடைந்தேன்.
அதனாலயே அவர் வெறியுடன் பேட்டிங் செய்ய வந்தார். டிராவிஸ் ஹெட்டை தொடர்ந்து கிளாஸென் அடித்து நொறுக்கினார். ஆனால் கடைசியில் அப்துல் சமத் விளையாடிய இன்னிங்ஸ் முக்கியமானதாக அமைந்தது. ஆர்.சி.பி அணி முகமது சிராஜ், மேக்ஸ்வெல் ஆகியோரை ட்ராப் செய்தனர். ரூ. 17.50 கோடிக்கு வாங்கிய கேமரூன் கிரீனையும் ரூ. 11.50 கோடிக்கு வாங்கிய அல்சாரி ஜோசப்பையும் அவர்கள் எடுக்கவில்லை.
இது போன்ற ஆர்.சி.பி அணி நிர்வாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன். தோல்விக்காக நான் ஆர்.சி.பி வீரர்களை குறை சொல்ல மாட்டேன். ஏலத்தின் போதே இப்படி திட்டமின்றி செயல்படும் ஆர்சிபி அணி நிர்வாகத்தை தான் நான் குறை சொல்வேன். இவ்வாறு அவர் கூறினார்.