பெங்களூரு அபார பந்துவீச்சு - குஜராத்தை 147 ரன்களில் சுருட்டி அசத்தல்
|குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஷாருக்கான் 37 ரன்கள் அடித்தார்.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத், அணி ஆரம்பம் முதலே பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் விருத்திமான் சஹா 1 ரன்னிலும், சுப்மன் கில் 2 ரன்களிலும், சாய் சுதர்சன் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கை கோர்த்த ஷாருக்கான் - மில்லர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருவரும் இணைந்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் மில்லர் 30 ரன்களிலும், ஷாருக்கான் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய திவேட்டியா அதிரடியாக விளையாடினார். இதனிடையே ரஷித் கான் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய திவேட்டியா 21 பந்துகளில் 35 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
குஜராத் 19.3 ஓவர்களில் 147 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாருக்கான் 37 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக சிராஜ், யாஷ் தயாள், வைஷாக் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு விளையாட உள்ளது.