17 ஆண்டுகளாக தொடரும் பெங்களூரு அணியின் கோப்பை கனவு...ரசிகர்கள் ஏமாற்றம்
|நடப்பு ஐ.பி.எல். சீசனின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய பெங்களூரு அணி எலிமினேட்டரில் தோல்வியடைந்து வெளியேறியது.
அகமதாபாத்,
இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) புள்ளிப்பட்டியலில் 3-வது, 4-வது இடம் பிடித்த அணிகளான ராஜஸ்தான் ராயல்சும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும் மோதின. இதில் 'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ்கான் 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் 19 ஓவர்களில் 6 விக்கெட்இழப்பிற்கு 174 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. பவெல் 16 ரன்னுடனும், அஸ்வின் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். தோல்வியின் மூலம் பெங்களூரு அணி வெளியேறியது.
17 ஆண்டுகளாக தொடரும் பெங்களூரு அணியின் கோப்பை கனவு
நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்னும் ஒரு முறை கூட ஐ.பி.எல். கோப்பையை வெல்லவில்லை. அந்த சோகம் இந்த சீசனிலும் நீள்கிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.