இந்த முறை பெங்களூரு கோப்பையை வெல்லாது... ஆனால் அதை செய்தால் அடுத்த முறை வெல்லும் - முகமது கைப்
|நடப்பு ஐ.பி.எல். சீசனிலும் பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக முகமது கைப் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடி வருகிறது. முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்ட அந்த அணி அடுத்த 5 போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில் பெங்களூரு அணி தங்களுடைய கடைசி போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது. அதில் பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில் இம்முறையும் பெங்களூரு அணி பிளே ஆப் சென்று கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக முகமது கைப் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தளவுக்கு போராடி வந்த அவர்களுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இனிமேலாவது பெங்களூரு நிர்வாகம் கிளன் மேக்ஸ்வெல் போன்ற வெளிநாட்டு வீரர்கள் மீது ஆர்வம் காட்டாமல் கொல்கத்தா அணியைப்போல இந்திய வீரர்களுக்கு வாய்ப்பும் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதை செய்தால் கண்டிப்பாக அடுத்த வருடம் கோப்பையை வெல்ல முடியும் என்று தெரிவிக்கும் கைப் இது பற்றி பேசியது பின்வருமாறு:-
"ஆரம்பத்தில் அவர்கள்(ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) மோசமாக விளையாடினார்கள். தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்த அவர்கள் ஒரு மாதம் வெற்றியை பதிவு செய்யவில்லை. அதனாலேயே அவர்கள் இந்த நிலைமைக்கு வந்துள்ளனர். ஆனால் அவர்களின் கம்பேக்கை பாராட்ட வேண்டும். இருப்பினும் அவர்கள் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே இது அந்த அணிக்கு அடுத்த வருடத்திற்கான பாடமாகும். கொல்கத்தா அணி இந்திய வீரர்கள் மீது அதிக முதலீடு செய்த காரணத்தாலேயே புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தில் உள்ளனர்.
ராஜஸ்தான் அணியும் அதேபோல செயல்படுகிறது. எனவே பெங்களூரு அணியும் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து ஆதரவு கொடுக்க வேண்டும். அவர்கள் எப்போதும் வெளிநாட்டு வீரர்கள் மீது மோகத்தை கொண்டுள்ளனர். கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திரங்கள் இல்லாமல் நம்மால் வெல்ல முடியும் என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள். எனவே இந்திய வீரர்கள் மீது முதலீடு செய்தால் அவர்களால் கோப்பையை வெல்ல முடியும். ராஜஸ்தான் அணியும் அதை செய்துள்ளது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துருவ் ஜுரேல் போன்றவர்களை அதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்" என்று கூறினார்.