< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்

பெங்களூரு போராட்டம் வீண்: 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி

தினத்தந்தி
|
21 April 2024 7:47 PM IST

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.

இதன் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஈடன் கார்டனில் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த 20 ஓவர்களில் கொல்கத்தா 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 50 ரன்களும், சால்ட் 48 ரன்களும் அடித்தனர். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக யாஷ் தயாள், கேமரூன் கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி - பாப் டு பிளெஸ்சிஸ் களமிறங்கினர்.

இதில் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கிய விராட் கோலி 2 சிக்சர்களும் அடித்து அசத்தினார். அவர் 7 பந்துகளில் 18 ரன்கள் அடித்த நிலையில் ஹர்சித் ராணா பந்துவீச்சில் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து பாட் டு பிளெஸ்சிசும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கை கோர்த்த வில் ஜேக்ஸ் - படிதார் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு நம்பிக்கையை கொடுத்தனர். கொல்கத்தா பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

ஆனால் அரைசதம் அடித்த வேகத்திலேயே இருவரும் ரசல் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கிரீன் 6 ரன்களிலும், மஹிபால் லாம்ரோர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் 25 ரன்கள் அடித்தார்.

இதனால் பெங்களூரு அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் கரன் ஷர்மா 3 சிக்சர்கள் அடித்தார். கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கரண் ஷர்மா ஆட்டமிழந்தார். இதனால் கடைசி பந்தில் வெற்றி பெற பெங்களூரு அணிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 1 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 221 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா புள்ளி பட்டியலிலும் 2-வது இடத்திற்கு முன்னேறி அசத்தி உள்ளது.

பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 55 ரன்களும், படிதார் 52 ரன்களும் அடித்தனர். கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரசல் 3 விக்கெட்டுகளும் நரைன் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

மேலும் செய்திகள்