< Back
கிரிக்கெட்
பிளே-ஆப் சுற்றுக்கு பெங்களூரு தகுதியான அணி இல்லை கேப்டன் பிளிஸ்சிஸ் ஒப்புதல்
கிரிக்கெட்

'பிளே-ஆப் சுற்றுக்கு பெங்களூரு தகுதியான அணி இல்லை' கேப்டன் பிளிஸ்சிஸ் ஒப்புதல்

தினத்தந்தி
|
23 May 2023 3:56 AM IST

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணியாக நாங்கள் விளையாடவில்லை என்று பெங்களூரு கேப்டன் டு பிளிஸ்சிஸ் கூறியுள்ளார்.

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை விரட்டியது. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 197 ரன்கள் குவித்தது. விராட் கோலி 101 ரன் விளாசினார். இந்த இலக்கை குஜராத் அணி சுப்மன் கில்லின் (104 ரன்) சதத்தின் உதவியுடன் 19.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

இந்த தோல்வியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி (7 வெற்றி, 7 தோல்வியுடன் 14 புள்ளி) 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை பறிகொடுத்து வெளியேறியது. பெங்களூரு தோற்றதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் கிட்டியது.

நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பெங்களூரு அணி இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றது கிடையாது. அந்த அணி முதல் சுற்றுடன் நடையை கட்டுவது இது 8-வது முறையாகும்.

நடப்பு தொடரில் பெங்களூரு அணியில் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (8 அரைசதத்துடன் 730 ரன்), விராட் கோலி (639 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் பெரிய அளவில் இல்லை. குறிப்பாக தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் ஒரேயடியாக சொதப்பி விட்டனர். பந்து வீச்சில் முகமது சிராஜ் (19 விக்கெட்) மட்டும் கவனத்தை ஈர்த்தார்.

பிளிஸ்சிஸ் பேட்டி

தோல்விக்கு பிறகு பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில், 'பேட்டிங்கை பொறுத்தவரை டாப்-4 வரிசை வீரர்கள் கணிசமான பங்களிப்பை வழங்கினர். இந்த சீசனில் எங்களது மிடில் வரிசை வீரர்கள் சீராக ரன் எடுக்க தவறினர். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் முன்னேற்றம் தேவை. கடந்த ஆண்டு தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். ஆனால் இந்த முறை அப்படி அமையவில்லை. வெற்றிகளை குவித்த அணிகளை நீங்கள் திரும்பி பார்த்தால் அந்த அணிகளில் 5, 6, 7-வது வரிசையிலும் சில அதிரடி ஆட்டக்காரர்கள் இருப்பது தெரியும்' என்றார்.

தொடர்ந்து பிளிஸ்சிஸ் வெளியிட்ட வீடியோ பதிவில், 'உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த தொடரில் நாங்கள் மிகச்சிறந்த வலுவான அணிகளில் ஒன்றாக இருக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக தொடர் முழுவதும் சில மெச்சத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் ஒட்டுமொத்தத்தில் ஒரு அணியாக 14 ஆட்டங்களில் ஆடிய விதத்தை திரும்பி பார்த்தால், அனேகமாக நாங்கள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதியான அணி கிடையாது.

திருப்தி அளித்த தொடக்கம்

குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது. வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். துரதிர்ஷ்டவசமாக நெருங்கி வந்து வீழ்ந்து விட்டோம். இந்த ஆண்டில் எங்களது செயல்பாட்டை உற்றுநோக்கினால், மேக்ஸ்வெல் பார்முக்கு வந்திருப்பது சாதகமான ஒரு அம்சமாகும். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய நானும், விராட் கோலியும் கிட்டத்தட்ட எல்லா ஆட்டங்களிலும் 50 ரன்னுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து தந்தது அற்புதம். இதே போல் முகமது சிராஜின் பந்து வீச்சு அருமையாக இருந்தது' என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்