ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கடைசிகட்ட ஆட்டங்களை தவற விடும் ஸ்டோக்ஸ்
|பென் ஸ்டோக்ஸ் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.
வெலிங்டன்,
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான பென் ஸ்டோக்சை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.16½ கோடிக்கு வாங்கியது. கடந்த இரு சீசனில் பல்வேறு காரணங்களால் ஐ.பி.எல்.-ல் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் கடைசி பகுதியில் விளையாடமாட்டார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். மார்ச் 31-ந்தேதி தொடங்கி மே 28-ந்தேதி வரை நடக்கிறது. அடுத்த 4 நாட்களில் இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் (ஜூன் 1-ந்தேதி தொடக்கம்) லண்டன் லார்ட்சில் மோதுகிறது. இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் நடத்தப்படும் இந்த டெஸ்டில் விளையாடுவீர்களா என்று பென் ஸ்டோக்சிடம் நேற்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நிச்சயம் விளையாடுவேன் என்று பதில் அளித்தார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்.-ன் கடைசி கட்ட ஆட்டங்களை தவறவிடப்போவது உறுதியாகியுள்ளது. 'ஐ.பி.எல்.-ல் விளையாடும் மற்ற இங்கிலாந்து டெஸ்ட் வீரர்களிடம், ஆஷஸ் போட்டிக்கு தயாராகுவதில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டு அதற்கு ஏற்ப முடிவு செய்வோம் ' என்றும் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டார்.
பென் ஸ்டோக்ஸ் தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார். மவுன்ட் மாங்கானுவில் நடந்த தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நாளை (வெள்ளிக்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.