டி20 உலகக்கோப்பை: இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுமா?- ஸ்டோக்ஸ் சுவாரசிய பதில்
|இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதுமா? என பத்திரிகையாளர் ஒருவர் ஸ்டோக்ஸிடம் கேள்வி எழுப்பினார்.
அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது. சூப்பர்-12 போட்டிகள் நிறைவு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
முதல் அரையிறுதிப்போட்டியில் நாளை நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் விளையாடுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நவம்பர் 10 ஆம் தேதி அடிலெய்டில் விளையாடுகின்றன.
இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், " நாங்கள் இதுவரை எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்தியாவுடனான அரையிறுதி மோதலுக்கு முன்னதாக எங்களது ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறோம். இந்த விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளீர்கள் என்பதை நாங்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
அடிலெய்டு மைதானம் நாங்கள் விளையாடிய மைதானங்களில் இருந்து வேறுபட்டது, வெவ்வேறு பரிமாணங்களுடன். நாங்கள் பெரிய சதுர எல்லைகள் கொண்ட மைதானங்களில் விளையாடியுள்ளோம். அதனால் இங்கே நாங்கள் எங்கள் திட்டங்களை கொஞ்சம் மாற்ற வேண்டும்" என்றார்.
இதை தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர் இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதுமா ? என ஸ்டோக்ஸிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஸ்டோக்ஸ், "இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் மோதுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் நம்புகிறேன், அப்படி இருந்தால் அது இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு சிறந்த போட்டியாக அமையும். நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை விளையாடி வெல்வதற்காக இங்கு வந்துள்ளோம்" என்று கூறினார்.