இந்தியாவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த பென் டக்கெட்
|இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் பென் டக்கெட் சதம் அடித்துள்ளார்.
ராஜ்கோட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்திய பென் டக்கெட் 133 ரன்களுடனும், ஜோ ரூட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதில் வெறும் 88 பந்துகளிலேயே சதமடித்து அசத்திய பென் டக்கெட் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த இங்கிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 1990-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முன்னாள் வீரர் கிரஹாம் கூச் 95 பந்துகளில் சதமடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் 34 வருட சாதனையை உடைத்த டக்கெட் தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார்.