பி.சி.சி.ஐ.யின் முடிவு எனக்கு ஏமாற்றமாக அமைந்தது - ஜான்டி ரோட்ஸ் ஆதங்கம்
|இந்திய அணியில் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் பீல்டிங் துறையில் மாற்றங்களை கொண்டு வந்ததாக ஜான்டி ரோட்ஸ் பாராட்டியுள்ளார்.
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டார். அதே சமயம் பீல்டிங் பயிற்சியாளரை தவிர்த்து அபிஷேக் நாயர், மோர்னே மோர்கல், ரியான் டஸ்சேட் ஆகிய புதிய துணைப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த மூவரையுமே ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தை வைத்து கம்பீர் தம்முடைய துணைப் பயிற்சியாளராக வேண்டும் என்று பிசிசிஐ'யிடம் கேட்டு வாங்கினார்.
அதே போல லக்னோ அணியில் கம்பீருடன் ஃபீல்டிங் பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் செயல்பட்டார். எனவே அவரை கம்பீர் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பீல்டிங் துறைக்கு வெளிநாட்டவர் தேவையில்லை என்று கருதிய பிசிசிஐ டி திலிப்பை மீண்டும் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
இந்நிலையில் தம்முடைய மகளுக்கு 'இந்தியா' என்று பெயரை வைத்து கோவாவில் குடியிருக்கும் தம்மை வெளிநாட்டவர் என்பதால் பீல்டிங் பயிற்சியாளராக பிசிசிஐ வேண்டாமென சொன்னது ஏமாற்றத்தை கொடுத்ததாக ஜான்டி ரோட்ஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்திய அணியில் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் பீல்டிங் துறையில் மாற்றங்களை கொண்டு வந்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு :- "இதை உங்களால் நம்ப முடிகிறதா? அவர்கள் ஒரு சர்வதேச பயிற்சியாளரை விரும்பவில்லை. இத்தனைக்கும் நான் உள்ளூர்காரர்தான். அதாவது மெரா நாம் ஜாண்டி ரோட்ஸ் (என்னுடைய பெயர் ஜான்டி ரோட்ஸ்). நான் கோவாவை சேர்ந்தவன். ஒருவேளை நான் கோவாவை சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்திருக்கலாம். அதனால் நான் ஏதோ ஒரு மெட்ரோ நகரத்திற்கு குடிபெயர வேண்டும். இந்திய அணியின் கடந்த 2 பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
தோனி தலைமையில் நிறைய சீனியர்கள் இருந்தனர். அப்போது தோனி நிறைய உடல் திறனை காண்பித்தார். தனது ஐபிஎல் கெரியரின் இறுதிப்பகுதியில் 40 வயதிலும் அவர் பிட்னசுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார். அதன் பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி பிட்னஸை தேர்வில் ஒரு அங்கமாக மாற்றினார். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் பிட்டாக இல்லையெனில் அசத்த முடியாது. அவற்றை சமமாக செய்ததாலேயே இந்தியா நல்ல பீல்டிங் அணியாக வந்துள்ளது" என்று கூறினார்.