இஷான் கிஷன் விஷயத்தில் பிசிசிஐ எடுத்த முடிவு சரியானதுதான் - பாகிஸ்தான் முன்னாள் வீரர்
|ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் நீண்ட காலமாக விளையாடி தங்களுடைய பணிச்சுமையை நிர்வகிக்கின்றனர்.
கராச்சி,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், கில், ராகுல் போன்ற இளமையும் அனுபவம் கலந்த வீரர்கள் நிறைந்துள்ளனர்.
இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக இளம் வீரரான துருவ் ஜுரேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஒரு வருடமாக இந்திய அணியுடன் பயணித்ததால் ஏற்பட்ட பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் குடும்பத்தை பார்க்க அனுமதி கொடுக்குமாறு பிசிசிஐ-யிடம் கேட்டார். அதில் நியாயமும் இருந்ததால் பிசிசிஐ உடனடியாக அந்த தொடரிலிருந்து விடுப்பு கொடுத்தது.
ஆனால் அந்த விடுப்பில் இஷான் கிஷன் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டார். அதன் காரணமாகவே இஷான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் இதனை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்தார். மேலும் நன்னடத்தை காரணமாக இஷான் கிஷன் நீக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த இளம் வயதிலேயே இஷான் கிஷன் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் பிசிசிஐ எடுத்துள்ள முடிவு சரியானது என கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு;- "பணிச்சுமையால் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இஷான் கிஷன் விலகியது சில விமர்சனங்களை எழுப்பின. ஆனால் உங்களுடைய கெரியரின் ஆரம்பத்திலேயே நீங்கள் எப்படி மனதளவில் பாதிக்க முடியும்? இதே அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் நீண்ட காலமாக விளையாடி தங்களுடைய பணிச்சுமையை நிர்வகிக்கின்றனர்.
இருப்பினும் அவர்கள் இதுபோன்ற காரணத்தை சொல்லி நான் கேட்டதில்லை. இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய விஷயமாகும். ஆனால் அந்த வாய்ப்பை நீங்கள் இப்படி தட்டிக் கழிப்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இஷான் கிஷனை தேர்வு செய்யாமல் பிசிசிஐ சரியான வேலை செய்துள்ளது என்றே நினைக்கிறேன். இந்த முடிவு பணிச்சுமையை காரணமாக சொல்லும் வீரர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும். ஏனெனில் நாட்டுக்காக நீங்கள் விளையாடும்போது ஓய்வு கேட்க முடியாது" என்று கூறினார்.