< Back
கிரிக்கெட்
சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மாற்று வீரர் முறையை அறிமுகம் செய்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட்

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மாற்று வீரர் முறையை அறிமுகம் செய்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம்

தினத்தந்தி
|
18 Sept 2022 12:20 AM IST

சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மாற்று வீரரை களம் இறக்கும் புதிய முறையை அறிமுகம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

மாற்று வீரர் முறை அறிமுகம்

38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அடுத்த மாதம் 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் ஆட்டத்தின் போது ஒரு மாற்று வீரரை களம் இறக்க வழிசெய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்துள்ளது. இந்த புதிய முயற்சி குறித்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு பி.சி.சி.ஐ. இ-மெயில் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறது.

இந்த புதிய முறை வெற்றிகரமாக அமைந்தால் அடுத்ததாக 2023-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த மாற்று வீரருக்கு தாக்கம் (இம்பேக்ட்) ஏற்படுத்தும் வீரர் என்று பெயரிடப்பட்டுள்ளது. 20 ஓவர் போட்டியின் மீது மேலும் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துவதற்காக இந்த புதிய முறை கொண்டுவரப்படுகிறது.

14 ஓவர் முடியும் முன்பாக...

இதன்படி 'டாஸ்' போடுகையில் ஒவ்வொரு அணியும் கொடுக்கும் களம் இறங்கும் 11 வீரர்கள் பட்டியலுடன் 4 மாற்று வீரர்களின் பெயரையும் அளிக்க வேண்டும். அந்த மாற்று வீரர்களில் இருந்து ஒருவரை ஆட்டத்தின் போது பயன்படுத்தி கொள்ளலாம். ஏதாவது ஒரு இன்னிங்சில் 14 ஓவர்கள் முடியும் முன்பு 11 வீரர்களில் ஒருவருக்கு பதிலாக தாக்கம் ஏற்படுத்தும் மாற்று வீரர் ஒருவரை ஒரு அணி களம் இறக்கலாம். இரு இன்னிங்ஸ்களில் ஏதாவது ஒன்றில் இந்த மாற்று வீரர் வாய்ப்பை பயன்படுத்த முடியும். தாக்கம் ஏற்படுத்தும் மாற்று வீரராக களம் இறங்குபவர் பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் ஈடுபட முடியும்.

உதாரணமாக ஒரு தொடக்க ஆட்டக்காரர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தாலும், அவருக்கு பதிலாக வரும் மாற்று வீரர் கடைசி வரை பேட்டிங் செய்யலாம். என்னவானாலும் ஒரு அணி 11 வீரர்களை மட்டுமே பேட்டிங் செய்ய அனுப்ப முடியும். இதேபோல் சில ஓவர்கள் பந்து வீசிய ஒரு பவுலருக்கு பதிலாக களம் இறங்கும் மாற்று வீரர் தனக்குரிய 4 ஓவர்களை முழுமையாக பந்து வீசலாம்.

பலத்தை அதிகரிக்க வாய்ப்பு

ஒரு அணி முதலில் பேட்டிங் செய்கையில் நல்ல ஸ்கோர் குவிக்கிறது. இரண்டாவது இன்னிங்சில் அந்த அணி ஒரு பேட்ஸ்மேனை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக ஒரு பவுலரை மாற்று வீரராக சேர்த்து தங்கள் அணியின் பந்து வீச்சை பலப்படுத்த முடியும். முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த அணி அடுத்து பேட்டிங் செய்கையில் நன்றாக பேட்டிங் செய்ய தெரியாத வீரருக்கு பதிலாக ஒரு சிறந்த பேட்ஸ்மேனை மாற்று வீரராக சேர்த்து பேட்டிங்கை வலுப்படுத்த வழிகாணலாம். இந்த புதிய விதிமுறை காரணமாக சில ஆடுகளங்களில் டாஸ் ஜெயிக்கும் அணிக்கு முதலில் பேட்டிங் செய்வதால் கிடைக்கும் அனுகூலத்தை சமாளிக்க தகுந்த வகையில் எதிரணி மாற்று வீரரை தேர்வு செய்ய முடியும். மழை காரணமாக போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படும் பட்சத்தில் அதற்கு தகுந்த மாதிரி மாற்று வீரர்கள் களம் இறங்க வேண்டிய ஓவரின் காலக்கெடு மாறும். மாற்று வீரருக்கு வழிவிடும் வகையில் வெளியேறும் வீரர் அதன் பிறகு அந்த ஆட்டத்தில் பீல்டராக கூட களம்புக முடியாது. விதிமுறைக்கு மாறாக பந்து வீசியதாக ஆட்டத்தின் போது இடைநீக்கம் செய்யப்படும் வீரருக்கு பதிலாக இறங்கும் மாற்று வீரர் பந்து வீச முடியாது.

2005, 2006-ம் ஆண்டுகளில் சர்வதேச ஒருநாள் போட்டியில் சூப்பர் மாற்று வீரர் முறை அறிமுகமானது. அதில் ஒரு பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்து விட்டால் அவருக்கு பதிலாக செல்லும் சூப்பர் மாற்று வீரர் பேட்டிங் செய்ய முடியாது. அதேபோல் ஒரு பந்து வீச்சாளருக்கு மாற்றாக இறங்கும் சூப்பர் மாற்று வீரர் அந்த வீரர் எத்தனை ஓவர் வீசி முடித்துள்ளாரோ? அதில் இருந்து அவருக்கான மீதமுள்ள ஓவரை தான் வீச முடியும்.

ஆனால் தாக்கம் ஏற்படுத்தும் மாற்று வீரர் விதிமுறையின்படி களம் காணும் வீரர்களுக்கு முழுமையாக ஆடும் வாய்ப்பு கிடைப்பதால் இது ஆட்டத்தின் போக்குக்கு தகுந்தபடி அணிகள் தங்களது பலத்தை அதிகரிக்க உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்