காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ஹர்திக் பாண்ட்யா கடினமாக உழைத்து வருகிறார் - ஜெய் ஷா
|கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
மும்பை,
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியின்போது பந்தை காலால் தடுக்க முயன்ற ஹர்திக் பாண்ட்யா, கால் இடறி கீழே விழுந்தார். இதனால் அவரது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்ட்யா முழு உடல் தகுதியை எட்டுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று பேட்டி அளித்த அவர், 'கணுக்கால் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ஹர்திக் பாண்ட்யா தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடினமாக உழைத்து வருகிறார். ஜனவரி மாதம் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு முன்னதாக அவர் முழு உடல் தகுதியை எட்டுவார் என்று எதிர்பார்க்கிறோம்.
தென்ஆப்பிரிக்க தொடர் முடிந்து திரும்பியதும் தலைமை பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளர்களின் பதவி காலத்துக்கான ஒப்பந்தம் குறித்து இறுதி செய்யப்படும்' என்று தெரிவித்தார்.