டுவிட்டரில் 'புளூ டிக்'-ஐ இழந்த பிசிசிஐ
|இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மூவர்ண கொடியாக மாற்றியதால் 'புளூ டிக்'-ஐ இழந்துள்ளது.
மும்பை,
நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு 'வீடுகள் தோறும் தேசிய கொடி' இயக்கத்தின் ஒரு பகுதியாக மக்களும் தங்களது சமூக வலைத்தள கணக்குகளின் முகப்பு படங்களை தேசிய கொடியாக வைக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி பிரதமருக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தனது டுவிட்டர் கணக்கின் முகப்பு படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் லோகோவிலிருந்து இந்திய தேசிய கொடியான மூவர்ண கொடியாக மாற்றியது.
டுவிட்டர் நிறுவனம் புளூ டிக் பெற்ற கணக்குகளின் பெயர் மற்றும் முகப்பு படங்களில் ஒரு கொள்கையைக் கொண்டுள்ளது. புளூ டிக் பெறுவதற்கு முன் பிசிசிஐ-யின் டுவிட்டர் கணக்கில் முகப்பு படமாக இந்திய கிரிக்கெட் அணியின் லோகோ இடம் பெற்றிருந்தது. ஆனால் தற்போது பிசிசிஐ தனது முகப்பு படத்தை இந்திய மூவர்ணக் கொடிக்கு மாற்றியுள்ளது. அது டுவிட்டரின் கொள்கைக்கு எதிராக அமைந்துள்ளதாக டுவிட்டர் நிறுவனமான எக்ஸ், அதன் புளூ டிக்கை நீக்கியுள்ளது.
அதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளராகவும் உள்ள ஆகாஷ் சோப்ராவும் தனது டுவிட்டர் முகப்பு படத்தை மூவர்ண கொடிக்கு மாற்றியதால் தனது 'புளூ டிக்'-ஐ இழந்துள்ளார்.