இங்கிலாந்து போன்ற நாடுகளை பார்த்து பி.சி.சி.ஐ. அதனை மாற்ற வேண்டும் - ஹர்பஜன்
|ஐ.பி.எல். தொடரின் அட்டவணை இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ஹர்பஜன் சிங் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் நிறைவடைந்ததும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் பொருட்டு இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி தாயகம் திரும்பியுள்ளனர். இருப்பினும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வழக்கம் போல ஐ.பி.எல். தொடரை முடித்துவிட்டுதான் உலகக்கோப்பையில் விளையாட உள்ளனர்.
ஆனால் கடந்த காலங்களில் இதேபோல ஐ.பி.எல். தொடரில் விளையாடி விட்டு முழுமையாக தயாராகாமல் 2021 மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்கியது, இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. அந்த வரிசையில் இம்முறையும் மே 26-ம் தேதி ஐ.பி.எல். இறுதிப்போட்டி நடைபெறும் நிலையில் ஜூன் 2-ம் தேதி டி20 உலகக்கோப்பை துவங்க உள்ளது. அதனால் இம்முறையும் உலகக்கோப்பைக்கு முழுமையாக தயாராவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில் இம்முறையும் ஐ.பி.எல். தொடரின் அட்டவணை இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ஹர்பஜன் சிங் அதிருப்தியை தெரிவித்துள்ளார். எனவே அடுத்த முறையாவது இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளை பார்த்து இந்தியாவின் நலன் கருதி பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். அட்டவணையை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
"ஐ.பி.எல். தொடரின் அட்டவணையால் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக அனைத்து இந்திய வீரர்களும் ஒன்றாக சேர்ந்து சில போட்டிகளில் விளையாடுவது கடினம் என்று நினைக்கிறேன். இந்திய அணி 4 - 5 போட்டிகளில் விளையாடுவது நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளுக்கு எதிராக அமெரிக்காவில் விளையாடி நீங்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அது நடப்பது போல் தெரியவில்லை.
எனவே தற்போதைக்கு கிடைக்க உள்ள பயிற்சி போட்டியை நாம் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் வருங்காலத்தில் உலகக்கோப்பை அல்லது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற தொடருக்கு 10 - 15 நாட்கள் முன்பாக இந்திய அணியினர் ஒன்றாக சேர்ந்து விளையாடுவது நன்றாக இருக்கும். எனவே அடுத்த முறை இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளை பார்த்து இந்தியாவின் நலன் கருதி பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். அட்டவணையை மாற்ற வேண்டும்" என்று கூறினார்.