< Back
கிரிக்கெட்
ஸ்டீபன் பிளெமிங்கை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க முனைப்பு காட்டும் பி.சி.சி.ஐ..? - வெளியான தகவல்

Image Courtesy: @ChennaiIPL

கிரிக்கெட்

ஸ்டீபன் பிளெமிங்கை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க முனைப்பு காட்டும் பி.சி.சி.ஐ..? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
15 May 2024 10:49 AM IST

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை பி.சி.சி.ஐ நியமிக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

அவரது பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. இப்போதே தொடங்கி உள்ளது. அதன்படி அந்த பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ.க்கு வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என்று காலக்கெடு விதித்துள்ளது.

மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்குட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் பி.சி.சி.ஐ. விதித்துள்ளது.

இந்த பதவியில் நியமிக்கப்படுபவர் ஜூலை 1 முதல் பொறுப்பேற்பார் என்றும் பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளரான நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டீபன் பிளமிங்-கை பி.சி.சி.ஐ நியமிக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பி.சி.சி.ஐ அவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது மாறிவரும் கிரிக்கெட்டுக்கு ஏற்ப, அணியை உருவாக்குதல், புதிய திட்டங்களை கொண்டு வருதல், வீரர்களை சரியாக நிர்வகித்தல் போன்றவற்றுக்காக, புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது ஒருபுறம் இருக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரிக்கி பாண்டிங்கையும் புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்