ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது பிசிசிஐ
|பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விருதுகளை வழங்கினார்.
ஐதராபாத்,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 2006-07-ம் ஆண்டுகளில் முதல் முறையாக பிசிசிஐ விருதுகள் வழங்கப்பட்டன.
சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது முதன் முதலில் 1994-ல் வழங்கப்பட்டது. கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பிசிசிஐ தற்போது விருதுகள் அறிவித்துள்ளது. இந்த விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் சி. கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது.
கடந்த 1981-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் ரவி சாஸ்திரி. 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உள்பட 3,830 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 206 ரன்கள் அடங்கும். இதே போன்று 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 18 அரைசதங்கள் உள்பட 3,108 ரன்களும் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 109 ரன்கள் அடங்கும்.அதன் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அதே போன்று கடந்த 2023 -ம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டுள்ளது .
மேலும் கடந்த 2020 -21 ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கும் , கடந்த 2021 -22 ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருது இந்திய அணியின் வெகுபந்துவீச்சாளர் பும்ராவுக்கும் வழங்கப்பட்டது.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விருதுகளை வழங்கினார்.