கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டே பந்து வீச பிசிசிஐ தடை...!
|பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் விளையாடும் திறனை பிசிசிஐ கண்காணித்து வருகிறது.
மும்பை,
இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களிடம் இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யும் முயற்சியில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் விளையாடும் திறனை கண்காணித்து வருகிறது. இதில் சில வீரர்களின் பந்து வீசும் முறை ஆட்சேபனைக்கு உரியதாகவும், முறையற்றதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவில் விளையாடும் அனைத்து மாநிலங்களை சேர்ந்த வீரர்களில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்து வீசாத பவுலர்களை பிசிசிஐ கண்டறிந்து அதிரடியாக தடை விதித்துள்ளது. அதன்படி கர்நாடக அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர் மனீஷ் பாண்டே விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்து வீசாததால் அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பந்து வீசுவதற்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.
முழு நேர பேட்ஸ்மேனாக செயல்படக்கூடிய அவர் அவ்வப்போது பகுதி நேர பவுலராக பந்து வீசுவது வழக்கமாகும். எனினும் அவருடைய பவுலிங் விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. எனினும் எதிர்காலத்தில் தனது பந்து வீசும் முறையை சரி செய்து வந்தால் அவர் மீண்டும் பந்து வீச அனுமதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளது.